Wednesday 21 January 2015

கரூரில் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கரூரில் உள்ள கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லூரி மாணவி

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள மண்மலை பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. தனியார் பள்ளி நிர்வாகி. இவரது மகள் சோனா என்கிற மோகனாம்பாள் (வயது 19). இவர் கரூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இதற்காக விடுதியில் தங்கியிருந்த அவர் பொங்கல் விடுமுறைக்காக மண்மலையில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கல்லூரிக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று காலை தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி கல்லூரிக்கு செல்லாமல் விடுதி அறையிலேயே தங்கியுள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

மாலையில் சக மாணவிகள் கல்லூரி முடிந்து விடுதிக்கு வந்து அறைக்கதவை தட்டியுள்ளனர். அப்போது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் அந்த மாணவிகள் கதவு துவாரத்தின் மூலம் அறைக்குள் பார்த்துள்ளனர். அப்போது மாணவி மோகனாம்பாள் மின் விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவர்கள் இது குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். கல்லூரி நிர்வாகத்தினர் பசுபதிபாளைம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள்மொழிஅரசு, சப்- இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோகனாம்பாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது பற்றி அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

கடிதம் சிக்கியது

இந்த நிலையில் சாவதற்கு முன்பு மோகனாம்பாள் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் மோகனாம்பாள், எனது சாவிற்கு யாரும் காரணம் இல்லை என்று குறிப்பிட்டு இருந்ததாக போலீசார் கூறினர். இந்த சம்பவம் குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகனாம்பாள் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive