Monday 19 January 2015

ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க வேட்பாளர் வளர்மதி வேட்பு மனுதாக்கல் செய்தார்

திருச்சி

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே மனு தாக்கலின் போது வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். தேர்தலில் முறைகேடுகளை தடுக்க 10 சோதனை சாவடிகளில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறைத்தண்டனையை தொடர்ந்து பதவி இழந்தார். அத்துடன் அவர் வகித்து வந்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் தானாக இழக்க நேரிட்டது. இதனால் காலி இடமாக அறிவிக்கப்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு 13-2-2015 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று  தொடங்குகியது. வேட்பு மனு தாக்கல் செய்ய வருகிற 27-ந்தேதி கடைசி நாள் ஆகும். 28-ந்தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை செய்யப்படும். அப்போது தகுதி இல்லாத வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். 30ந்தேதி வரை மனுக்களை வாபஸ் பெற விரும்புபவர்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும்.

 ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் வி. மனோகரன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவரது அலுவலகம் திருச்சி திண்டுக்கல் மெயின்ரோட்டில் சோழன் நகர் என்ற இடத்தில் உள்ளது. உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஸ்ரீரங்கம் தாசில்தார் காதர் மைதீன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவரது அலுவலகம் திருச்சிசென்னை டிரங்க் ரோட்டில் திருவானைக்காவலில் உள்ளது. வேட்பாளர்கள் இந்த இரண்டு இடங்களிலும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. 

இரண்டு அலுவலகங்களிலும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்வதை தெரிவிப்பதற்கான அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. அதன் அருகிலேயே வேட்பு மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்ந்து 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு உள்ளது. இதே போல் இந்த அலுவலகங்களின் முன்பாக 100 மீட்டர் தூரத்தில் சாலையில் குறியீடும் செய்யப்பட்டு உள்ளது. 

இது தொடர்பாக தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில் ’100 மீட்டர் இடைவெளி குறியீடு செய்யப்பட்டுள்ள இடத்தில் வேட்பாளருடன் வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும். வேட்பாளருடன் சேர்த்து 3 வாகனங்கள் மட்டும் வேட்பு மனு பெறும் அலுவலகம் வரை வருவதற்கு அனுமதிக்கப்படுவர். வேட்பாளர் காரில் இருந்து இறங்கி அலுவலகத்திற்குள் செல்லும் போது அவரையும் சேர்த்து 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. 

திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே இயங்கி வரும் 8 சோதனைச்சாவடிகளுடன், மேலும் 2 சோதனைச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டு போலீசார் மற்றும் பறக்கும் படையினர் வாகன தணிக்கை செய்து வருகிறார்கள். உரிய ஆவணங்கள் இன்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்து சென்றாலோ,  ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பொருட்கள் எடுத்து சென்றாலோ அவை பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு  உள்ளது. 

ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சுவர்களில் செய்யப்பட்டு இருந்த விளம்பரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு வருகின்றன. விளம்பர பதாகைகளும் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டு உள்ளது. தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக பொதுமக்கள் புகார் செய்வதற்கான அதிகாரிகளின் தொலைபேசி மற்றும் செல்போன் எண்களும் ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளன.

ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் எஸ். வளர்மதி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை கவனிக்க 50 பேர் கொண்ட குழுவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அமைத்துள்ளார். இந்த குழுவில் அமைச்சர்கள் உள்பட கட்சி அணி தலைவர்கள், நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.இந்த குழுவினர் இன்று ஸ்ரீரங்கம் வருகிறார்கள். தேர்தல் முடிவும் வரை அவர்கள் தொகுதியில் முகாமிட்ட பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். 

ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஸ்ரீரங்கம் தாசில்தாருமான காதர் மைதீனிடம் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். வளர்மதி வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது அவருடன் எம்.பி. பா.குமார், அரசு தலைமை கொறடா மனோகரன், மாநில கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் டி.பி.பூனாட்சி, மாநிலங்களவை உறுப்பினர் டி.ரத்னவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் தி.மு.க. சார்பில் என்.ஆனந்த் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை கவனிக்க 64 பேர் கொண்ட குழுவை தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.  தி.மு.க. வேட்பாளர் ஆனந்த் 22ந்தேதி (வியாழக்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

மற்ற கட்சியினர் ஸ்ரீரங்கம் தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட முடிவு செய்துள்ளது. அவர்கள் இன்னும் 2 நாட்களில் வேட்பாளர் பெயரை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
த.மா.க. போட்டியிடாது என்று கட்சி தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார். காங்கிரஸ், தே.மு.தி.க., பா.ம.க. உள்பட மற்ற கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது பற்றி எந்த முடிவையும் இன்னும் அறிவிக்க வில்லை. வேட்பு மனு தாக்கல் 27-ந் தேதி முடிவடைகிறது. அதன் பின்னர் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive