Monday 19 January 2015

முன்னாள் மத்திய மந்திரி கிருஷ்னா தீரத் பாஜகவில் இணைந்தார்

புதுடெல்லி,

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி  காலத்தில் மத்திய மந்திரியாக பதவி வகித்த கிருஷ்ணா தீரத் இன்று பாஜகவில் இணைந்தார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு மந்திரியாக பதவி வகித்த  தீரத்(59) இன்று  பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவை நேரில் சந்தித்து தன்னை கட்சியில் இணைத்துக்கொண்டார். அவருடன் டெல்லி பாரதீய ஜனதாவின் தலைவர் சதிஷ் உப்தயாய் உடன் இருந்தார். 

டெல்லி சட்டப்பேரவை உறுப்பினராக 1984-2004 வரையும் வடக்கு டெல்லி பாராளுமன்ற உறுப்பினராக 2004 ஆம் ஆண்டு முதல் 2014 வரை பதவி வகித்த கிருஷ்ணா தீரத், மக்களுக்காக சேவை செய்வதற்காக  அமித் ஷா வை சந்தித்ததாகவும், இந்த நோக்கத்திற்காக இங்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தார். பாரதீய ஜனதாவில் உங்களது பங்களிப்பு என்னவாக இருக்கும் என்று அவரிடம் கேட்டபோது, கட்சி தலைமைதான் இது குறித்து முடிவு எடுக்கும் என்றும் எனது பங்களிப்பு மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

தீராத் பாஜகவில் இணைந்தது பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ், பாரதீயஜனதா கட்சி பதட்டமான நிலையிலும் நம்பிக்கையற்றும் இருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜய் மக்கான், பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்துக்கு போதிய வரவேற்பு இல்லாததால் பதட்டமும் விரக்தியும் அடைந்துள்ள பாஜக எந்த ஒரு தலைவரையும் தங்கள் கட்சியில் இணைத்துகொள்ளும். தங்கள் சொந்த கட்சியின் தலைவர்களை நம்பாததால் பாஜக பிற கட்சியில் இருந்து தலைவர்களை இறக்குமதி செய்கிறது என்று தெரிவித்தார். 

கடந்த ஒருவாரத்தில் பாஜகவில் இணையும் மூன்றாவது பிரபலமான பெண் தீராத் ஆவார். வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் தலைவர் சாசியா இல்மி ஆகியோர் கடந்த ஒருவாரத்தில் பாஜகவில் இணைந்தனர் என்பது நினைவு கூறத்தக்கது. 

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive