Wednesday 21 January 2015

காந்திபுரத்தில் மேம்பால பணியையொட்டி பஸ் நிலையங்கள், 3 கோவில்களை மாற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் தகவல்

கோவை காந்திபுரத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக பேச்சுவார்த்தை நடத்தி அங்குள்ள 3 கோவில்களும் மாற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

காந்திபுரம் மேம்பாலம்

கோவை காந்திபுரம் நஞ்சப்பா ரோட்டில் உள்ள பார்க் கேட் சிக்னல் அருகே இருந்து சத்தி ரோட்டில் உள்ள ஆம்னி பஸ்நிலையம் வரை சுமார் 3½ கி.மீ. தூரத்துக்கு மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தூண்கள், மற்றும் அதன் மீது ராட்சத பீம்கள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். மேம்பால பணிகள் நடந்து வரும் நிலையில், அந்த ரோட்டின் இருபுறங்களிலும் வாகனங்கள் சென்று வருவதால் காலை மற்றும் மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

மேயர் ஆய்வு

இந்த நிலையில், கோவை மாநகராட்சி மேயர் கணபதி ப.ராஜ்குமார், ஆணையாளர் விஜயகார்த்திகேயன், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விசுவநாதன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலையில் மேம்பால பணிகள் நடந்து வரும் பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்கு நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தனர். அந்த வழியாக செல்லும் வாகனங்கள் இடையூறு இல்லாமல் செல்லும் வகையில் போக்குவரத்தை மாற்றி அமைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார்கள். மேலும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் கூறியதாவது:-

4 இடங்கள் தேர்வு

காந்திபுரம் மேம்பால பணிகள் எப்படி நடக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேம்பாலத்தை விரைவாக கட்டி முடிக்க வேண்டும் என்பதற்காகவும், வாகன ஓட்டிகளின் வசதிக்காகவும், காந்திபுரத்தில் உள்ள மத்திய பஸ்நிலையம், ஆம்னி பஸ்நிலையம் ஆகியவற்றை தற்காலிகமாக வேறு இடத்துக்கு மாற்ற 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக சிறப்பு கூட்டம் நடத்தி ஆலோசனை செய்த பின்பு, அந்த பஸ்நிலையங்களை எந்த இடத்துக்கு கொண்டு செல்வது என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு, பஸ்நிலையங்கள் உடனடியாக மாற்றப்படும்.

மாற்றி அமைக்கப்படும்

மேலும் மேம்பாலம் அமைக்கப்படும் இடத்தில் உள்ள முனியப்பன், சித்தி விநாயகர், மாரியம்மன் ஆகிய 3 கோவில்களை வேறு பகுதியில் மாற்றி அமைக்க மாநகராட்சி சார்பில் தலா 6 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த கோவில்களை அந்த இடத்துக்கு மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் பின்பு கோவில்கள் மாற்றி அமைக்கப்படும்.இதற்காக பலதரப்பினரும் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டங்கள் ஓரிரு நாளில் நடத்தப்படும்.

இவ்வாறு ஆணையாளர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது சேலஞ்சர் துரை எம்.எல்.ஏ., மண்டல தலைவர் ஆதிநாராயணன், மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive