Tuesday 20 January 2015

கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்: வேட்பு மனு தாக்கல் செய்ய போனவரின் திட்டத்தில் மாற்றம்

கெஜ்ரிவாலுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்: வேட்பு மனு தாக்கல் செய்ய போனவரின் திட்டத்தில் மாற்றம்புது டெல்லி, ஜன. 20-

டெல்லி முதல் மந்திரி வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யும் திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் நாளை மனு தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி முதல் மந்திரி வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் அரவிந்த் கெஜ்ரிவால் புது டெல்லி சட்டசபை தொகுதி தேர்தல் அதிகாரியிடம் இன்று வேட்பு மனுவினை தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தார். 

இதற்காக, கூலி தொழிலாளர்கள் மற்றும் கால்வாய் அடைப்பை நீக்கி சுத்தம் செய்யும் பணியாளர்கள் அதிகம் வசிக்கும் வால்மீகி சதன் பகுதியில் இருந்து தனது ஊர்வலத்தை துவக்கிய கெஜ்ரிவாலுடன் ஆயிரக்கணக்கான ஆம் ஆத்மி தொண்டர்கள் அணிவகுத்து சென்றனர்.

திறந்த ஜீப்பில் கட்சி சின்னமான துடைப்பத்தால் அமைக்கப்பட்ட தோரணங்கள் தொங்க ஊர்வலமாக சென்ற கெஜ்ரிவால், சில இடங்களில் சாலையோரமாக கூடி நின்ற மக்களிடையே ஆதரவு திரட்டும் வகையில் பேசினார். அப்போது காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வை குறைகூறி பேசிய அவர், டெல்லியில் இந்த முறை நிலையான ஆட்சி அமைக்கும் வகையில் பெருவாரியான ஆம் ஆத்மி வேட்பாளர்களை சட்டசபைக்கு தேர்வு செய்து அனுப்பும்படி வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.

வழிநெடுக மக்கள் கூட்டம் நிறைந்திருந்ததால் வேட்பு மனுவை தாக்கல் செய்யும் அலுவலகத்துக்கு கெஜ்ரிவால் உரிய நேரத்தில் சென்று சேர முடியவில்லை. இதனையடுத்து, அவர் நாளை வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பா.ஜ.க. முதல் மந்திரி வேட்பாளரும், இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியுமான கிரண் பேடி இதே தொகுதிக்கு நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மக்கானும் நாளை வேட்பு மனுவை தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, டெல்லி சட்டசபை தேர்தலில் ஓட்டு போடுவதற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்கள் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். ஓட்டுகளை மட்டும் துடைப்பம் சின்னத்தில் போடுங்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் பேசிய வீடியோ பதிவை டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி தலைமை தேர்தல் கமிஷனுக்கு நேற்று அனுப்பியிருந்தார்.

இதனையடுத்து, கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்துள்ள தேர்தல் கமிஷன், இவ்விவகாரம் தொடர்பாக வரும் 22-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அவருக்கு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive