Monday 19 January 2015

மத்திய சென்சார் போர்டு தலைவராக பஹ்லாஜ் நிஹாலானி நியமனம்

மத்திய சென்சார் போர்டு தலைவராக பஹ்லாஜ் நிஹாலானி நியமனம்புதுடெல்லி, ஜன.19-

மத்திய சென்சார் போர்டின் தலைவராக பஹ்லாஜ் நிஹாலானி நியமிக்கப்பட்டுள்ளார்.

திரைப்படங்களுக்கு சென்சார் போர்டு அமைப்பு சான்றிதழ் அளித்த பின்பே திரையிட முடியும். மத்திய சென்சார் போர்டு மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.

சென்சார் போர்டு மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சென்சார் போர்டு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக அதிகாரிகள் அல்லாத பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுகிறார்கள்.

பல்வேறு மாநில மொழி படங்களுக்கு பிராந்திய சென்சார் போர்டுகள் தணிக்கை சான்றிதழ் வழங்கும். இங்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டால் மத்திய போர்டிலும் அதன் பிறகு தீர்ப்பாயத்திலும் சென்று தணிக்கை சான்றிதழ் பெறும் வழிமுறை உள்ளது.

மும்பையில் உள்ள மத்திய சென்சார் போர்டில் தலைவராக லீலா சாம்சனும், 23 உறுப்பினர்களும் செயல்பட்டு வந்தனர். இவர்கள் முந்தைய காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டவர்கள். பா.ஜனதா அரசு பொறுப்பேற்ற பிறகும் இவர்கள் பதவியில் நீடித்து வந்தனர்.

இந்த நிலையில் ‘‘மெசஞ்சர் ஆப் காட்’’ (கடவுளின் தூதர்) என்ற படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் லீலா சாம்சன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மத்திய சென்சார் போர்டு இந்த படத்துக்கு அனுமதி மறுத்து விட்டது. ஆனால் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக லீலா சாம்சன் சென்சார் போர்டு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

சினிமா படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் அரசியல் தலையீடும், ஊழலும் தலை விரித்தாடுவதாக குற்றம் சாட்டி இருந்தார். சென்சார் போர்டில் உள்ள சில உறுப்பினர்கள் ஊழல்வாதிகளாக உள்ளனர். அவர்களால் எங்களது நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படுகிறது என்றும் லீலா சாம்சன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையே லீலா சாம்சனைத் தொடர்ந்து மத்திய சென்சார் போர்டு உறுப்பினர்களில் மேலும் சிலர் ராஜினாமா செய்தனர். இவர்களும் தங்கள் பதவி விலகல் கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் சினிமா மற்றும் மத்திய அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜினாமா செய்த சென்சார் போர்டு தலைவர் லீலா சாம்சன் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர். சிறந்த பரத நாட்டிய கலைஞர் ஆவார். சமூக சேவைகளில் ஆர்வம் கொண்டவர். சென்னையில் உள்ள கலா ஷேத்திராவின் தலைவராகவும், சங்கீத நாடக அகாடமியின் தலைவராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், காலியாக இருந்த சென்சார் போர்ட் தலைவர் பதவிக்கு பிரபல சினிமா தயாரிப்பாளர் பஹ்லாஜ் நிஹாலானியை மத்திய அரசு இன்று நியமனம் செய்துள்ளது.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive