Tuesday 20 January 2015

ஒபாமா வருகையை யொட்டி பாகிஸ்தான் எல்லையில் தீவிர கண்காணிப்பு; இந்திய எல்லை பாதுகாப்பு படை அதிகாரி தகவல்

ஜம்மு,

ஒபாமா வருகையையொட்டி காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானையொட்டிய சர்வதேச எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக இந்திய எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி. ராகேஷ் சர்மா தெரிவித்தார்.

ஒபாமா வருகிறார்
டெல்லியில் வருகிற 26-ந்தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 25-ந்தேதி இந்தியா வருகிறார். இதையொட்டி டெல்லியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழா மற்றும் அணிவகுப்புக்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் தனது பதவி காலத்தில் இரு முறை இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் தடவை ஆகும். ஒபாமா முதன் முதலாக கடந்த 2010-ம் ஆண்டு இந்தியா வந்தார். அதன்பிறகு அவர் இப்போது மீண்டும் இந்தியா வருகிறார். அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்திய அதிகாரிகளும், அமெரிக்க அதிகாரிகளும் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்கள்.

பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
ஒபாமா வருகையின் போது, இந்தியாவில் எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்தக்கூடாது என்றும், மீறி தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் உள்ள போதிலும், அதை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஒபாமா டெல்லி வர இருப்பதால் எல்லையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி. ராகேஷ் சர்மா நேற்று ஜம்மு நகரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கண்காணிப்பு தீவிரம்
இந்தியாவுக்கு மிகமிக முக்கிய பிரமுகர்கள் வந்த போதெல்லாம், எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபட்டு இருக்கிறது. ஒபாமா இந்தியா வரும் இந்த சமயத்திலும் அதுபோல் நடக்காது என்று நம்மால் சொல்ல முடியாது. இதனால் காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லைக்கோடு பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. எல்லைக்கு அப்பால் இருந்து கெட்ட நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியையும் முறியடிக்கும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

எல்லைக்கு அப்பால் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் கிடைத்து உள்ளன. ஊடுருவல் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும்.

இவ்வாறு ராகேஷ் சர்மா கூறினார்.

எல்லையில் கூடுதல் வீரர்கள்
காஷ்மீரில் சர்வதேச எல்லையையொட்டிய பகுதியில் கூடுதலாக 1,200 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், கடும் குளிர், பனிமூட்டத்தை பயன்படுத்தி காஷ்மீருக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் முயற்சி மேற்கொள்வதாகவும் டெல்லியில் நேற்று எல்லை பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன.

தீவிரவாதிகளின் பேச்சை இடைமறித்து கேட்டதில், லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்தினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரியவந்து இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறின.

இந்தியாவுக்கு வெளிநாட்டு தலைவர்கள் வரும் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்று உள்துறை ராஜாங்க மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

சூதாட்டம்
தாஜ்மகாலை பார்வையிடுவதற்காக ஒபாமா தனது குடும்பத்தினருடன் 27-ந்தேதி ஆக்ரா செல்ல இருக்கிறார். அங்கு அவர் ஒரு மணி நேரம் செலவிட இருக்கிறார். தாஜ்மகால் வளாகத்துக்குள் சுமார் 20 நிமிடம் இருப்பார். ஒபாமா ஆக்ரா வருகையை மூத்த போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் டி.ராவ் நேற்று உறுதி செய்தார்.

ஒபாமாவின் வருகையையொட்டி ஆக்ரா நகரிலும், தாஜ்மகால் பகுதியிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அமெரிக்க ரகசிய சேவைப் பிரிவு அதிகாரிகள் அங்கு முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்கள்.

இதற்கிடையே, ஒபாமா தாஜ்மகாலை பார்வையிட வருவாரா? மாட்டாரா? என்பது பற்றி ஆக்ரா நகரில் சூதாட்டம் நடத்தப்படுவதாக தகவல் கிடைத்து இருப்பதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive