Tuesday 20 January 2015

சுனந்தா மரணம் தொடர்பாக சசி தரூரிடம் போலீசார் விசாரணை டெல்லி போலீஸ் நிலையத்தில் நடந்தது

புதுடெல்லி,
சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக சசி தரூரிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
கொலை வழக்கு
திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி 17–ந்தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் அறையில் இறந்து கிடந்தார். இது மர்ம மரணம் என முதலில் வழக்கு பதிவு செய்த டெல்லி போலீசார், பிரேத பரிசோதனை இறுதி அறிக்கைப்படி தற்போது கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கின் விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக் குழுவினர், சசி தரூரின் வீட்டு வேலைக்காரர் நாராயண் சிங், குடும்ப நண்பர் சஞ்சய் தேவன் உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
சசி தரூரிடம் விசாரணை
இதைத்தொடர்ந்து சசி தரூரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இது தொடர்பாக அவருக்கு ‘சம்மன்’ அனுப்பினார்கள்.
வெளியூரில் இருந்த சசி தரூர் நேற்று டெல்லி திரும்பினார். டெல்லி வந்ததும், போலீஸ் விசாரணைக்கு ஆஜராவது தொடர்பாக தனது வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு அவர், தெற்கு டெல்லியில் வசந்த் விகார் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு சென்றார். அங்கு, சுனந்தா மரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் சசி தரூரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார்கள். அவர்களுடைய கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
விசாரணை முடிந்ததும் சசி தரூர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
முன்னாள் மந்திரி மணீஷ் திவாரி
இந்த வழக்குடன் தொடர்புடைய மீதமுள்ள நபர்களிடம் அடுத்த சில நாட்களில் விசாரணை நடத்தப்படும் என்று கூறிய போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்சி, விசாரணை அனைத்தும் முடிந்த அளவு வேகமாக முடிக்கப்பட்டு விரைவில் ஒரு முடிவு எட்டப்படும் என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜனவரி 15–ந்தேதி திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு சசி தரூர்–சுனந்தா தம்பதி விமானத்தில் சென்ற போது, அப்போதைய தகவல் தொடர்பு மந்திரி மணீஷ் திவாரியும் அதே விமானத்தில் பயணம் செய்தார். விமானத்தில் சுனந்தாவுக்கும், சசி தரூருக்கும் இடையே தகராறு நடந்ததாகவும், அதை மணீஷ் திவாரி பார்த்ததாகவும் தகவல் வெளியானது.
விசாரணை நடத்தப்படுமா?
எனவே இந்த வழக்கு தொடர்பாக மணீஷ் திவாரியிடம் விசாரணை நடத்துவீர்களா? என கமிஷனர் பஸ்சியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த பஸ்சி, ‘இந்த வழக்கு தொடர்பான தகவல்கள் தெரிந்த ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்தப்படும். இந்த தகவல்கள் எதையும் வெளியில் கூற முடியாது’ என்று கூறினார்.

0 comments:

Post a Comment

Total Pageviews

Popular Posts

Blog Archive